Wednesday, July 28, 2010

கீதா தியானம்

1. ஒம் பகவத் கீதை தாயே! நீ சாட்சாத் பகவான் நாராயணனால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டவள். புராண முனிவரான வியாசரால் மகாபாரதத்தில் அமைக்க பெற்றவள். அத்வைத அமுதத்தை பொழிபவள். பிறவிப்பிணியை போக்குபவள். பதினெட்டு அத்யாயங்களை உடையவள். பகவதீ! உன்னை தியானிக்கின்றேன்.

2. தெளிந்த புத்தி படைத்த வியாச முனிவரே! மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவரே! மகாபாரதம் என்னும் எண்ணெய் நிறைந்த ஞானதீபத்தை ஏற்றிவைத்த உமக்கு நமஸ்காரம்.

3. சரணடைந்தவர்களுக்கு கற்பக மரம் போன்றவரும், பசுவை ஓட்டுவதற்காக ஒரு கையில் பிரம்பை பிடித்திருப்பவரும், கீதை என்னும் அமுதத்தை கறந்தவரும், ஞானத்தை அடையாளமாக உடையவருமான ஸ்ரீகிருஷ்ணருக்கு நமஸ்காரம்.

4. எல்லா உபநிஷதங்களும் பசுக்கள். ஸ்ரீகிருஷ்ணர் பால் கறப்பவர். அர்ஜுனன் கன்று. நல்லறிவு படைத்தவர்கள் பாலை அருந்துபவர்கள். கீதயமுதமே ஒப்பற்ற பால்.

5. வசுதேவரின் மகனும், கம்சனையும் சாணுரனையும் கொன்றவரும், தேவகிக்குப் பரமானந்தத்தைக் கொடுப்பவரும், ஜகத்குருவும், தெய்வமுமாகிய ஸ்ரீகிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

6. குருஷேத்திரப் போர்க்களத்தில் நிகழ்ந்த போராகிய நதிக்கு பீஷ்மரும் துரோணரும் கரைகள்; ஜெயத்ரதன் தண்ணீர்; காந்தார மன்னன் நீலோத்பல மலர்; சல்லியன் சுறாமீன்; கிருபர் பிரவாகம்; கர்ணன் பேரலைகள்; அசுவத்தாமனும் விகர்ணனும் பயங்கரமான மகர மீன்கள்; துரியோதனன் நீர்ச்சுழல். அந்தப் போர்நதி ஸ்ரீகிருஷ்ணரை படகோட்டியாகக்கொண்டு பாண்டவர்களால் கடக்கப்பட்டது.

7. வியாசரின் வாக்கு என்னும் நீரில் உதித்ததும், பல கதைகளை மகரந்தமாக உடையதும், இறைமொழியால் மலர்ந்ததும், நல்லோராகிய தேன்வண்டுகளால் நாள்தோறும் ஆனந்தமாக மீண்டும்மீண்டும் அருந்தப்படுவதும், கீதையாகிய நறுமணத்தை உடையதும், குற்றமற்றதுமாகிய மகாபாரதம் என்னும் தாமரைப்பூ இந்தக் கலியுகத்தின் குற்றங்களை நீக்க விரும்புபவனுக்கு நன்மை செய்யட்டும்.

8. யாருடைய அருள் ஊமையைப் பேச வைக்கின்றதோ, முடவனை மலை தாண்டச் செய்கின்றதோ அந்தப் பரமானந்த மாதவனை நான் வணங்குகின்றேன்.

9. பிரம்மா, வருணன், இந்திரன், ருத்திரன், மருத் தேவதைகள் போன்றோர் யாரை தெய்வீகத் துதிகளால் போற்றுகின்றர்களோ, சாம கானம் செய்பவர்கள் யாரை அங்க, பதக்கிரம, உபநிஷதங்களுடன் கூடிய வேதங்களால் பாடுகின்றார்களோ, யோகிகள் தியான நிலையில் மனத்தை யாரிடம் நிலைநிறுத்தி உணர்கிறார்களோ, தேவர் மற்றும் அசுரர் கூட்டங்கள் யாருடைய முடிவை அறிவதில்லையோ, அந்த தெய்வத்திற்கு நமஸ்காரம்.